மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில், பாவேஷ் குமார், விஜய்பாய் ஆகியோர் ஹவாலா பணம் ரூ.3.60 கோடியை கார் ஒன்றில் எடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அவர்கள் காரில் பணத்துடன் செல்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சிலர் அப்பணத்தை கொள்ளையடிப்பதற்காக நான்கு வாகனங்களில் பணம் எடுத்துச்செல்லப்பட்ட காரை பின் தொடர்ந்து சென்றனர். வேகத்தடை ஒன்றில் பணத்துடன் சென்ற கார் மெதுவாக சென்ற போது அதனை பின் தொடர்ந்து வந்த கார்கள் அதனை தடுத்து நிறுத்த முயன்றன. ஆனால் பணம் இருந்த கார் அவர்களிடமிருந்து தப்பித்து வேகமாக சென்றது.
அந்த காரை இரும்பு கம்பி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார்சைக்கிளில் கொள்ளையர்கள் விரட்டி சென்றனர். பணம் இருந்த காரை பல கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்றனர். அப்படி இருந்தும் பணம் இருந்த காரை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் மோட்டார்சைக்கிளில் விரட்டி சென்றவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு பணம் இருந்த காரை தடுத்து நிறுத்தினர்.
பணம் இருந்த காரில் இருந்தவர்களை கொள்ளையர்கள் அடித்து உதைத்துவிட்டு காரில் இருந்த 3.60 கோடியை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து பணத்தை இழந்தவர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து பணத்துடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர். நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இக்கொள்ளையில் பணத்தை எடுத்துச்சென்ற இரண்டு பேரில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.