வாஷிங்டன்: நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் கார்பன்-டை- ஆக்சைடு (CO2) இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அண்டவெளியில் பல அறிய புகைப்படங்களை பதிவுச் செய்து வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியே இந்தத் தகவலையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது நாசா மூலம் தெரியவந்துள்ளது.
கிட்டதட்ட பூமியிலிருந்து சுமார் 700 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது வாயுக்களால் ஆன இந்த ராட்சத புறக்கோள். இதனை WASP-39 என்ற பெயரால் விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். வியாழன் கோளைவிட பெரிய உருவில் உள்ள இக்கோள் 900 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ளது. நமது பூமி எப்படி நட்சத்திரமான சூரியனை சுற்றுகிறதோ, அவ்வாறே இந்தக் கோளும் அதன் நட்சத்திரத்தை சுற்று வருகிறது. ஆனால் WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்ற எடுத்துக் கொள்ளும் நாள் வெறும் நான்கு நாட்களே. அவ்வளவு வேகமாக WASP-39 அதன் நட்சத்திரத்தை சுற்றுகிறது.
2011-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த WASP-39 கோளின் வளிமண்டலத்தில் நீராவி, சோடியம், பொட்டாசியம் இருப்பதாக ஹப்பிள், ஸ்பைட்சர் போன்ற தொலைநோக்கிகள் கண்டுபிடித்தன. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தனது நுண்ணிய பண்பின் காரணமாக WASP-39 கோளின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதை உறுதிச் செய்துள்ளது.
ஜேம் வெப் தொலைநோக்கி: நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின என்பன போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும் என்று நாசா தெரிவித்தது.
பூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி விண்வெளியில் பதிவு செய்த புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை மாதம் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது.