பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜய கோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் தங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என அருகே வசிக்கும் மலையப்ப நகரைச் சேர்ந்த நாடோடியின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டயர் தொழிற்சாலையால் தங்களுக்கு ஏற்கெனவே பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் மேலும் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனுமதி தரக்கூடாது என நாடோடியின மக்கள் கூறியிருந்தனர்.
அதனடிப்படையில் கருத்துக்கேட்பு கூட்டம் ஏற்கெனவே இரண்டு முறை நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் அந்த கூட்டத்தில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இதனிடையே தனியார் டயர் தொழிற்சாலையைக் கண்டித்து அச்சமூக மக்கள் கடந்த 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் செய்த நபர்களுள் 14 பேர் மீது பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
முன்னறிவிப்பின்றி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் செய்ததால் குற்றவியல் நடைமுறை சட்டம் 110-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள கோட்டாட்சியர் அனைவரும் விசாரணைக்கு ஆஜராகும் படியும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு பதிவு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாடோடியின மக்கள் சிலரிடம் பேசினோம். ”ஃபேக்டரியிலிருந்து வெளியேறும் புகையால் எங்களது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிற ஆதங்கத்தில் அறவழியில் ஆலையின் முன்பு போராட்டம் நடத்தினோம்.
அதற்கு அந்த அதிகாரிகள் 110-ன் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சட்டம் அடிதடி, ரெளடிஸம் செய்யும் முக்கிய குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கும் பிரிவு இது. இதனை எப்படி எங்கள் மீது போட்டார்கள் என்பது தான் எங்களுக்குத் தெரியவில்லை” என்று கொந்தளித்தார்கள்.