பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த 25-ல் தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், செப்டம்பர் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 13 முதல் 15 வரை 3-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்றும், அனைத்து சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
நவம்பர் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை துணைக் கலந்தாய்வு நடைபெறும் என்றும், SCA – SC கலந்தாய்வானது நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் நவம்பர் 20-ம் தேதியே கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என்றும், அனைத்துவகை கலந்தாய்வும் ஆன்லைனிலேயே நடைபெறும் என்றும் உயர்கல்வித்துத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் அடிப்படையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தமிழ்ப் பாடமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்க உள்ளதாகவும் பேசிய அமைச்சர் பொன்முடி, கலை & அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வரும் 30-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
நீட் முடிவுகளுக்குப் பின் பொறியியல் கலந்தாய்வை நடத்துவதால் கடந்த ஆண்டைப்போல் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களே இருக்காது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பேட்டியின் போது உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: விற்பனை குறைவு தேக்கம் அதிகம்: ஒரே நாளில் 10 காசுகள் குறைந்த முட்டை விலைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM