சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் சென்னை பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், பேரவையின் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதியம் முறைப்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், மற்ற துறைகள்போல, போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு ஊதியம்வழங்க வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் நலனை முதல்வர் கவனத்தில் கொள்ளாதது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. எங்களுடன் சில சங்கங்கள் பேசிவருகின்றன. கூட்டுக் குழுவாக இணைந்து, அடுத்தகட்ட ஆர்ப்பாட்டத்தை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேரவையின் தலைவர் தாடி ம.ராசுகூறும்போது, “தற்போதைய ஒப்பந்தத்தில் 2019-ன் 4 மாதங்கள், 2020-ன்12 மாதங்கள், 2021-ன் ஒரு மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படாது. இந்த ஆண்டுக்கான நிலுவைத் தொகை மட்டுமே வழங்கப்பட உள்ளது”என்றார்.