மகேஷ்பாபு ஜஸ்ட் எஸ்கேப்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவான லைகர் திரைப்படம் நேற்று வெளியானது. ஹிந்தியில் உருவான இந்த படம் தென்னிந்திய மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியானது. அதற்கேற்ற வகையில் படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி அனன்யா பாண்டேவும் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இருந்து இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவாக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியது. குறிப்பாக பூரி ஜெகன்நாத், ஏற்கனவே தான் இயக்கிய பத்ரி, அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகிய படங்களின் சாயலிலேயே இந்த படத்தையும் உருவாக்கி இருக்கிறார் என்றும் வலுவான திரைக்கதை இல்லை என்றும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் ரொமான்டிக் ஹீரோவாக பார்த்த விஜய் தேவரகொண்டாவை ஒரு மிகப்பெரிய ஆக்சன் கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பாக மிகப்பெரிய குத்துச்சண்டை வீரரான மைக் டைசனுடன் அவர் போதும் காட்சிகள் நகைப்புக்கு இடம் தரும் வகையில் இருக்கிறது என்றும் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் எங்கள் தலைவர் தப்பித்தார் என சோசியல் மீடியாவில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். காரணம் விஜய் தேவரகொண்டாவிற்கு முன்பாக இந்த படத்தில் நடிப்பதற்காக பூரிஜெகன்நாத் மகேஷ்பாபுவைத்தான் அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என ஒதுங்கிக் கொண்டார் மகேஷ்பாபு. இத்தனைக்கும் மகேஷ்பாபுவுக்கு போக்கிரி என்கிற மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவரது திரையுலக பயணத்தில் உறுதுணையாக இருந்தவர்தான் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இருந்தாலும் மகேஷ்பாபு தயவு தாட்சண்யம் பாராமல் மறுத்து விட்டதால் தற்போது ஜஸ்ட் எஸ்கேப் ஆகியுள்ளார் என்று தெலுங்கு திரையரங்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.