மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், காங். எம்.எல்.ஏ. ராஜ்குமார், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் `அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவார்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் மதியம் 2 மணியிலிருந்தே மாணவ மாணவிகள் விழா நடைபெறும் பந்தலில் காக்க வைக்கப்பட்டனர். மாலை ஐந்து மணிக்கு மேலாக தாமதமாகதான் நிகழ்ச்சிக்கு அமைச்சர் மெய்யநாதன் வந்து சேர்ந்தார்.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “இரண்டு மூன்று விழாக்கள் தொடர்ந்து இருந்ததால் குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை” என்று தாமதத்திற்கான காரணத்தைக் கூறினார். அதற்கு முன்னர் பேசிய தி.மு.க. மாவட்ட பொருப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், “பல நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்று வந்ததால் தாமதம் ஆகிவிட்டதாகவும், மாணவ மாணவிகள் முகம் சோர்வுடன் காணப்படுவதாகவும்” உண்மையை ஒப்புக்கொண்டு பேசினார். நிகழ்ச்சி மிகவும் தாமதமாக மாலை 6
மணியளவில் நிறைவடைந்த காரணத்தால் மாணவ மாணவிகள் குறித்த நேரத்தில் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இதுபற்றி பேசிய சமூக ஆர்வலர்கள், “விழாவுக்காக வகுப்பறைகளில் இருந்து மாணவர்களைக் கொண்டு பெஞ்சுகள், மற்றும் சேர்கள் விழா பந்தலுக்கு எடுத்துவரப்பட்டன. மாணவ மாணவிகளைப் பள்ளிகளில் நடைபெறும் எந்தவித பராமரிப்பு பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது. எந்த நிகழ்வுக்கும் வேலை வாங்க கூடாது என்று சமீபத்தில், பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுருந்தது. அந்த விதிமுறைகளை மீறி, பெஞ்சுகள் மற்றும் சேர்களை மாணவர்களை சுமக்க வைத்துள்ளனர்.
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே தமிழக அரசின் சுற்றறிக்கை காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது கண்டத்திற்குரியது ” என்றனர்.