மரங்களுக்கு ஆம்புலன்ஸ்: டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்து பசுமையைக் காப்பாற்றலாம்!

மருத்துவ அவசர நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. மேலும், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் விலங்குகளுக்கு உதவவும் ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது. ஆனால் மத்திய பிரதேசம் இந்தூர் பகுதியில், மரங்களுக்கென்று ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர் பகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட மேயர் புஷ்யமித்ரா பார்கவா, தோட்டக்கலை துறையின் கீழ் மரங்களுக்கென ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி உள்ளார். நகரினுடைய தட்பவெப்ப நிலையை மேம்படுத்தி, காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மரங்கள் அழிக்கப்படுவதாக யாரிடமிருந்தாவது அழைப்பு வரும் பட்சத்தில், உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் விரைந்து சென்று மரத்தை காக்கும். அதோடு மரங்கள் மற்றும் செடிகளை காக்க இந்த ஆம்புலன்ஸில் தோட்டக்கலை உதவியாளரும், இரண்டு தோட்டக்கலை சிறப்பு மருத்துவர்களும் இருப்பர். பசுமையை பராமரிக்க தாவரங்களுக்குத் தேவையான நீர்த்தெளிப்பான், மருந்துகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பிற உபகரணங்கள் ஆம்புலன்ஸில் இருக்கும்.

இது குறித்து மேயர் புஷ்யமித்ரா பார்கவா தெரிவிக்கையில், ‘’ஆம்புலன்ஸ் சேவைக்கு விரைவில் டோல் – ஃபிரீ எண் அறிமுகப்படுத்தப்படும். சூழலை பாதுகாக்க மக்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவலாம். அதுவரை, மக்கள் ஆம்புலன்ஸ் சேவையை பெற மாநகராட்சி அல்லது உத்யன் கிளையின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கலாம். இந்த வருடத்தில் நகரத்தில் 100 பூங்காக்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தோட்டங்களிலும் தரமான நல்ல மரங்களை நடுவது மட்டுமல்லாமல், மாநகராட்சி தோட்டங்களில் செடிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். செடிகள் வாடிப்போகாமல், சேதமடையாமல், எந்தவொரு நோய் ஏற்படுவதில் இருந்தும் அவை பாதுகாக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.