மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 2023 ஜனவரி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் இயக்கத்தை 2023 ஜனவரி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே வியாழக்கிழமையும், மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே வெள்ளிக்கிமைதோறும் வாராந்திர சிறப்பு ரயில்கள் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தன. பொள்ளாச்சி, பழநி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் இதுவாகும். எனவே, இந்த ரயிலுக்கு தொடக்கம் முதலே சிறப்பான வரவேற்பு இருந்தது. இந்நிலையில், திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இயக்கம் ஆகஸ்ட் 18 -ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த சிறப்பு ரயில்களை நீட்டித்து இயக்க ரயில்வே அறிவிப்பு வெளியிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த ரயில்களை 2023 ஜனவரி 27- ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06030) வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 2023 ஜனவரி 26-ம் தேதி வரை வியாழக்கிழமைதோறும், திருநெல்வேலியிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இதேபோல, மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:06029), வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் 2023 ஜனவரி 27-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும், மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில்கள் செல்லும் வழியில் கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழகடையம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆக.28) காலை 8 மணிக்கு தொடங்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.