மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 1 லட்சம் அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில்(120 அடி) இருப்பதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு இன்று விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வர வாய்ப்புள்ளது. எனவே, சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.