90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்து வருகிறார். இதில் முதலில் தான் உதவி இயக்குநராக இருந்த தருணம், தனது திருமண வாழ்க்கை, தனது மகன் மகள் பிறப்பு, மற்றும் மனைவியுடன் தனது வாழக்கை பயணம் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில். தனது முதல்பட வாய்ப்பு மற்றும் இந்த படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்தது எப்படி என்பது தொடர்பாக பேசியிருந்தார். தற்போது சட்டம் ஒரு இருட்டறை படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை படத்தை பார்த்த அமிதாப் பச்சன் வெகுவாக பாராட்டினார். அப்போது இந்த படத்தை ஹிந்தியில் பண்றோம்.அங்கியும் நீங்கள் தான் டைரக்ஷன் பண்ணப்போறீங்க என்று சொன்னார். அப்போது நான் யோசித்தேன் நாம் ஹிந்தி பார்ப்பது குற்றம் பேசுவதும் குற்றம் என்று இருந்ததால் ஹிந்தி கற்றுக்கொள்ள முடியவில்லை. அது என் தவறு.
மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் தவறில்லை ஆனால் தாய் மொழியை கடைசி வரை மறக்க கூடாது. எந்த நிலைக்கு சென்றாலும் தாயை மறக்க கூடாது என்பது போலத்தான் தாய் மொழியையும் மறக்க கூடாது. அதன்பிறகு ஹிந்தி படத்தை இயக்க தயாரானேன். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் இசையமைப்பாளர் சங்கர் கனேஷ் அந்த படத்தில் ஒரு கேரக்டர் செய்திருப்பார்.
அவரின் பேக் ஸ்டோரி வெறும் டைலாக்காக மட்டுமே படத்தில் வைத்திருப்போம். ஆனால் ஹிந்தியில் அமிதாப் பச்சன் அந்த கேரக்டரை டெவலப் பண்ணுங்க நான் அதில் நடிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக வேறு ஒருவரை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு அந்த கேரக்டரை டெவலப் பண்ண தொடங்கினோம்.
அப்போது படத்தின் ஹீரோவாக ரஜினிகாந்தை நடிக்க வைக்க முடிவு செய்தோம். அதுவரை தமிழில் ரஜினியை வைத்து நான் படம் இயக்கவில்லை. ஆனால் ஹிந்தியின் அவரின் முதல் பட இயக்குநர் நான் தான். அப்போது படத்திற்கான வேலைகளை தொடங்கினோம். ஆனால் தயாரிப்பாளர் அட்லூரி பூர்ணசந்திர ராவ் மற்றும் டி ராமாராவ் இருவரும் படத்தின் இயக்குனரை மாற்ற முடிவு செய்துவிட்டனர். அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிறகு என்னை தேற்றிக்கொண்டு ஒரு எத்தாளராக ஹிந்தி சினிமாவுக்கு செல்கிறோம் என்று நினைத்துக்கொண்டேன். படத்தை டி.ராமாராவ் இயக்கினார். படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. 29 தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கதை ஹிந்தியில் வெள்ளி விழா தமிழில் சூப்பர் ஹிட், கன்னடத்தில் சங்கர் நாக் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆகியது என்று பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“