புதுடெல்லி: கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு லஞ்சம் கேட்பதாக, இந்த மாநிலத்தை சேர்ந்த 13 ஆயிரம் தனியார் பள்ளிகள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜ அரசு நடைபெறுகிறது. இதன் மீது சமீப காலமாக லஞ்ச, ஊழல் புகார்கள் குவிகின்றன. அரசு ஒப்பந்த பணிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் கேட்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் ஒப்பந்ததாரர் ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், இந்த மாநிலத்தை சேர்ந்த 13 ஆயிரம் தனியார் ஆரம்ப, உயர்நிலை பள்ளிகள், முதல்வர் மோடிக்கு பரபரப்பு கடிதம் எழுதியுள்ளன. அதில், ‘தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார சான்றுகள் அளிப்பதற்காக, கர்நாடகா கல்வித்துறை லஞ்சம் கேட்கிறது,’ என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கர்நாடகா பாஜ மீதான லஞ்ச குற்றச்சாட்டு, மோடிக்கு நேரடியாக சென்றிருப்பதால் முதல்வர் பொம்மைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.