சென்னை : விஜய் சேதுபதி- பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளீர், மைக்கேல், மெரி கிருஸ்மஸ், மும்பைகார் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
மிரட்டலான வில்லன்
ஹீரோவாக மிரட்டி வந்த விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விக்ரம் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு அட்லியின் ஜவான், புஷ்பா 2 ஆகிய படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.மேலும், கார்த்தியின் ஜப்பான் படங்களிலும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பொன்ராம் இயக்கத்தில்
இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து பொன்ராம் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது வரை விஜய் சேதுபதி 46 என அழைக்கப்படும் இந்த திரைப்படத்துக்கு ‘DSP’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தலைப்பை விட ஒரு சிறப்பான தலைப்பை படக்குழு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் அறிவிப்பு
மேலும்,சேதுபதி படத்திற்கு பிறகு விஜய்சேதுபதி இந்த படத்தில் போலீஸாக நடிக்கிறார். இந்நிலையில் படத்தை நவம்பர் 11 ஆம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இசை வெளியீடு மற்றும் டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இயக்குநர் பொன்ராம்
வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் பொன்ராமுக்கு அதே கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான சீமராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து பொன்ராம் இயக்கிய எம் ஜி ஆர் மகன் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு நேரடியாக ஓடிடியில் ரிலீஸான இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது.