கொடைக்கானல்: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்காக, கொடைக்கானலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பேரிக்காய்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் ஆரஞ்சு, பிளம்ஸ், பட்டர் ப்ரூட், மலைவாழை, பேஷன் ப்ரூட், சீதாப்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ குணம் கொண்ட பழ வகைகள் அதிகம் விளைகின்றன. கொடைக்கானலில் விளைவிக்கப்படும் அதிக இரும்புச்சத்து கொண்ட பேரிக்காய்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
கடந்த மாதம் தொடங்கிய பேரிக்காய் அறுவடை பணிகள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வெளிமாநிலங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு கொடைக்கானலில் இருந்து அதிக அளவில் பேரிக்காய்கள் அனுப்பப்படுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பேரிக்காய் அனுப்பும்போது நல்ல விலை கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். சமீபத்தில் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த கனமழையால் பேரிக்காய்கள் அழுகி உதிர்ந்தன.
இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்கம்போல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொடைக்கானல் பேரிக்காய்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. பேரிக்காய்கள் மழையால் உதிர்ந்து வீணாகி போனதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.