திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி பெருவிழாவையொட்டி இன்று மாலை கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு ஆக. 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஸ்ரீகற்பகவிநாயகர் கோயிலில் கடந்த ஆக.22ம் தேதி கொடியேற்றத்துடன் முதல்நாள் விழா துவங்கியது.
2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலை வெள்ளி கேடகத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 6ம் திருநாளான இன்று மாலை 4.30 மணியளவில் கோயிலில் கற்பகவிநாயகர் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கோயில் வீதிகளில் வலம் வந்து கிழக்கு கோபுரம் அருகே அசூரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ம் திருநாளான நாளை இரவு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. 8ம் திருநாளான ஆக.29ல் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா, 9ம் திருநாளான ஆக.30ம் தேதி காலை திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறுகிறது.
மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தன காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. 10ம் திருநாளான ஆக.31ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம், மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை, அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறுகிறது.