மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 26(வெள்ளிக்கிழமை) முதல் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை துணை மேலாளர் ஷேகர் சென்னே கூறியுள்ளதாவது:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மூத்த குடிமக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஆகஸ்ட் 26 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதிக்கு பிறகு வெளியூர் செல்ல ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
75 வயதுக்கு மேற்பட்டோர் இலவசமாகவும், 65 முதல் 75 வயது வரையுடையோர் 50 விழுக்காடு கட்டணத்தில் பயணம் செய்யலாம். முதியோர் கட்டணத்தில் இலவசமாகவோ, பாதி கட்டணத்தில் பயணம் செய்ய விரும்புவோர் ஆதார், ஃபேன், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை உடன் வைத்திருக்க வேண்டும்.
புதுக்கட்சி தொடங்குகிறார் குலாம் நபி ஆசாத்? – காஷ்மீர் தேர்தலுக்கு ஆயத்தம்!
இந்த இலவச பயணத் திட்டமானது MSRTC(maharashtra state road transport corporation)நகரப் பேருந்துகளில் பொறுந்தாது. மாநிலம் முழுவதும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியுள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டம் குறித்து அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அம்மாநிலத்தை பொறுத்தவரையில் 2020 மார்ச் கொரோனாவுக்கு முன்பு வரை தினந்தோறும் இயக்கப்படும் 16,000 பேருந்துகளில் 65 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தரவுகள் உள்ளது.