ஜெய்ப்பூர்: நிறுவனத்தின் உரிமையாளர் உயிரிழந்துவிட்டது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட கம்பெனி வெளியிட்டுள்ள கடிதம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் வீட்டுப் பாடம் கொடுத்தால் கிளாஸில் ஒருவர் மட்டுமே அதைப் பொறுப்பாக முடிப்பார். மற்றவர்கள் பெரும்பாலும் அதையே அப்படியே காப்பி அடித்து விடுவார்கள்.
இந்த பழக்கம் பள்ளி, கல்லூரிகளில் மட்டும் என்றால் ஓகே. ஆனால் வேலைக்குச் சேர்ந்த பின்னாலும் இது தொடர்ந்தால் என்னவென்று சொல்வது! அப்படியொரு காமெடிதான் இப்போது அரங்கேறி உள்ளது.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உரிமையாளர் உயிரிழந்தது குறித்து முக்கிய ஆவணத்தைப் பகிர்ந்து இருந்தது. ஏகப்பட்ட பிழைகளுடன் இருந்த அந்த ஆவணத்தை நெட்டிசன்கள் வைத்துச் செய்து விட்டனர். அந்த கடிதத்தைக் கொஞ்சம் படித்து இருந்தாலே, என்ன பிழை என்பது அவர்களுக்குத் தெரிந்து இருக்கும்.
காப்பி பேஸ்ட்
அதைக் கூடச் செய்யாமல் அவர்கள் அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஆணவத்தை வெளியிட்டு உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த கார்ப்பரேட் நிறுவனம் அதன் அறிக்கையில் உரிமையாளர் காலமானதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். அதாவது ஆங்கிலத்தில் “pleased to inform promoter has died” என்று குறிப்பிட்டு உள்ளனர்.
கடிதம்
கடந்த ஆகஸ்ட் 25இல் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில், “4,41,000 பங்குகளை (8.76%) வைத்திருக்கும் எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீமதி சரோஜ் தேவி சாப்ரா இனி இந்த உலகில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த தகவலைப் பங்குச் சந்தை தரவுகளில் அப்டேட் செய்யுமாறும் அதில் கூறப்பட்டு உள்ளது.
கொடுமை
இதில் என்ன கொடுமை என்றால் இதைக் கூட படிக்காமல் அந்த நிறுவனத்தின் தலைவர் ஆஷிஷ் பக்ரேச்சாவும் அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில், இதைப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இணையத்தில் இருக்கும் டெம்ப்ளேட்களை ஏன் கண்மூடித்தனமாக அப்படியே பயன்படுத்தக்கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்று நெட்டிசன்கள் அந்த நிறுவத்தை வைத்துச் செய்து வருகிறார்கள்.