சென்னை : நகைச்சுவை நடிகர் சூரி இன்று தனது 45வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகராகும் கனவோடு கிராமத்திலிருந்து சென்னைக்கு வருபவர்கள் ஏராளம். அவர்களில் எத்தனை பேர் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்றால் அது கேள்விக்குறி தான்.
ஆனால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனக்கு என்று தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சூரி
நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் கவுண்டர்மணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், யோகிபாபு என்ற வரிசையில் இன்று நடிகர் சூரிக்கு முக்கிய இடம் உண்டு. மதுரை மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவரான சூரி சினிமா நடிகராகும் கனவுகளுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சென்னை வந்த போது அவருக்கான வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. சினிமா வாய்ப்பை தேடி தேடி அலைந்தார். திநகரில் லாரி க்ளீனராக சென்னை வாழ்க்கையை தொடங்கிய சூரிக்கு, மர்மதேசம் சீரியலில் எலெக்ட்ரீஷியனாகவும், பெயிண்டராகவுமே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சூரி சினிமா வாழ்க்கையில் இப்படித்தான் அடி எடுத்து வைத்தார்.
புரோட்டா சூரி
1998-ல் வெளியான மறுமலர்ச்சி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராகத் தலைகாட்டினார். இதையடுத்து 2009-ல் சுசீந்திரன் இயக்குநராகவும் விஷ்ணு விஷால் நடிகராகவும் அறிமுகமான வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் சூரிக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில், 50 புரோட்டா சாப்பிட்டால், 100 ரூபாய் வழங்கப்படும் என்றும், சாப்பிட்ட புரோட்டாவுக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை என்றும் போட்டி நடத்தப்படும். போட்டியில் கலந்து கொண்ட சூரி, 50 புரோட்டா சாப்பிட்டு முடிப்பார். ஆனால் கடை ஊழியர் சூரியை ஏமாற்ற முயற்சி செய்வார். அப்போது சூரி, இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க… நான் மொதல்ல இருந்து சாப்பிடுறேன் என்று சொல்லுவார். இவரது இந்தக் காமெடி சூரியை பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
ஹிட் படங்கள்
இதையடுத்து விமலுடன் களவாணி, நான் மகான் அல்ல, மனம் கொத்திப் பறவை, சுந்தரபாண்டியன், தேசிங்கு ராஜா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக அசத்தினார். இவரின் வித்தியாசமான பேச்சும்,உடல் மொழியும் ரசிகர்கள் மனத்தில் இவருக்கு என்று தனி இடத்தை பிடித்துக் கொடுத்தது.
முன்னணி நடிகர்களுடன்
விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்தார். வேலாயுதம்’படத்தைப் போல் அல்லாமல் இதில் இவரே முதன்மை நகைச்சுவைக் கதாபாத்திரமாக நடித்திருந்தார். அஜித்துடன் வேதாளம் படத்தில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். சூர்யாவுடன் அஞ்சான், சிங்கம் 3 படங்களிலும் நடித்தார். அதே போல சிவகார்த்திகேயன்,கார்த்தி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து ஸ்டார் அந்தஸ்தை பிடித்து விட்டார்.
ஹீரோவாக
காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கான்ஸ்டபிளாக நடித்து வருகிறார். ‘விடுதலை’ படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரிக்கு சமமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திறமையான நடிகர்
தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புதிய திறமைசாலிகள் கால் பதிக்கிறார்கள். நகைச்சுவை திறமையை முன்வைப்பவர்களே இந்தப் புதியவர்களில் அதிகம். இதனால் நிலவும் கடும் போட்டியைத் தாண்டியும் தன்னுடைய அபார நகைச்சுவைத் திறனாலும் தனிச் சிறப்புகளாலும் ஒரு நகைச்சுவைக் கலைஞராகவும் துணை நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தவிர்க்க முடியாத இடத்தைத் தக்கவைத்திருக்கிறார் சூரி.
இன்று பிறந்த நாள்
நடிகர் சூரி இன்று தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையொட்டி சமூக வலைதளங்களில் #HBD சூரி என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.