“அதிமுக ஆதரித்திருந்தால் இன்று நீட் தேர்வு ரத்தாகியிருக்கும்!" – திருச்சி சிவா சாடல்

​தி​.​மு​.​க தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நேற்று திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. போடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்​டார்.

திருச்சி சிவா

அப்போது பேசிய அவர், “சனாதன தர்மம் நிலைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்‌.என்.ரவி கூறி வருகிறார்.‌ ஆனால் சனாதனம் என்பது நாம் வாழுகின்ற உலகில் இன்றைக்கும் நம்மை தாழ்த்துகின்ற சூழ்ச்சிதான், அதனால்தான் அதை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த உலகம் சூரியனிலிருந்து நீர், பாறை, கல், மண், தாவரம் என உருவாகி முதன்முதலில் அமீபா எனும் உயிரினம் மூலம் தோன்றியது. ஆனால் ஆளுநர் கூறும் சனாதனமோ கடவுளின் பெயரைச் சொல்லி அவர் உடலில் இருந்து உருவானதாக மனிதர்களை பிரிவு படுத்​துகிறார்.

​தமிழ்நாட்டில் அண்ணா இயற்றிய இரு மொழிக்கல்வி சட்டம்தான் எப்போதும் தொடரும். இங்கு மும்மொழிக் கொள்கை இடம் பெறாது. இந்தித் திணிப்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் கொண்டு வர முடியாது​. விருப்பப்பட்டவர்கள் வேண்டும் என்றால் இந்தி படிக்கலாம், ஆனால் இந்தி கட்டாயப்படுத்தப்பட மாட்டாது​.

இந்தி எதிர்ப்பு

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வில் திருத்தம் கொண்டு வர தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது.‌ அதில் 4​ ​உறுப்பினர்களை மட்டும் கொண்ட தி.மு.க-விற்கு 86​ ​பேர் ஆதரவளித்தனர். ஆளும் பா.ஜ.க-விற்கு 105 வாக்குகள் கிடைத்ததால் அதில் தோல்வி அடைந்தது.‌ உண்மையில் நீட் தேர்வை எதிர்ப்போம் என்று சொல்லி வரும் அ.தி​.​மு​.​க அன்றைய வாக்கெடுப்பை புறக்கணிக்காமல், ஆதரித்திருந்தால் இன்றைக்கு நீட் தேர்வு ரத்தாகியிருக்கும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் எம்.எல்‌.ஏ சரவணக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.