அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்னை தமிழக அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் அதிமுக, தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் அணி என பிளவுபட்டு கிடக்கிறது. இந்த நிலையில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுக நிர்வாகிகள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், “அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நாடகம் நடத்தினார்கள். ஏழை எளிய மக்கள் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கழகம் அதிமுக. அந்த இலக்கை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொண்டர்களின் ஆதரவும் முழுமையாக இருக்கிறது.
உறுதியாக மாவட்டம்தோறும் இணைப்பை வலியுறுத்தி புரட்சி பயணம் தொடர்வோம். மேலும், பலர் எங்கள் பக்கம் வர இருக்கின்றனர். அது யார் என்பது பரம ரகசியம். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை முழுமையாக படித்த பின்புதான் கருத்து சொல்ல முடியும். கட்சியின் நலன் கருதி சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன்’’ என்றார்.