ஆட்சிக்கு சிக்கல்; முதல்வர் ஷாக்; ஆளுநர் கையில் பூதக்கண்ணாடி!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரது தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் மத்தியிலும் பலத்த ஆதரவு உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், மணிஷ் சிசோடியா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

இந்த சோதனைக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக, ஆம் ஆத்மி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. எனவே பாஜக-ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

அதே சமயம் டெல்லியில் தங்களது ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கும் பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில் நடைபெற இருக்கும் குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

இதை முன்னிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் குஜராத் மாநிலத்தில் முகாமிட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாக அறிவித்து அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி எடுத்துள்ள இந்த திடீர் முடிவு மற்றும் அதனால் ஏற்பட போகும் விளைவுகளை கணக்கிட்டு பார்த்து பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது.

இதன் காரணமாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசை எப்படி பழிவாங்குவது? என பாஜக தலைமை குழம்பிக்கொண்டு இருந்த சமயத்தில் முதல்வர் கெஜ்ரிவாலே வழி ஏற்படுத்தி தந்துள்ளது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது டெல்லி மாநில ஆளுநருக்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் ஆகாத சூழல் உள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஒப்புதலுக்காக முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கோப்புகளில் முதலமைச்சருக்கு பதிலாக ஊழியர்கள் கையெழுத்து போட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்பி உள்ளதோடு, அலுவலக ஊழியர் கையெழுத்திட்டு இருப்பதையும் ஆளுநர் சக்சேனா சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார்.

இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில், இது போல் இன்னும் என்னென்ன கோப்புகள் சந்தடி சாக்கில் அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன? என பூதக்கண்ணாடியுடன் ஆளுநர் மாளிகை ஆராயும் பணியில் இறங்கியுள்ளது.

அதே சமயம் இதையே காரணமாக காட்டி டெல்லியின் ஆட்டத்தை கலைக்கலாமா? என்ற கோணத்தில் பாஜக தலைமை சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.