அடிப்படை ஆவணம்:
இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் அடிப்படை ஆதாரமாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. பொதுமக்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமில்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகள் நிதியுதவியை பெறுவதற்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் பயனாளிகள் தங்களது வங்கி சேமிப்பு கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது அவசியமாகிறது.
இதேபோன்று வருமான வரி கணக்கு தாக்கலுக்கும் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியமாகிறது. மேலும் ரேஷனில் பொருட்களை பெறுவதில் தொடங்கி செல்ஃபோனுக்கான சிம் கார்டு பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது குடிமக்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இப்படி சாமானிய மக்கள் முதல் சாம்ராஜ்யத்தை ஆள்பவர்கள் வரை அனைவரது அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகவே ஆதார் ஆகிவிட்டது.
கவனக் குறைவும், தவறும்:
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பயனாளிகள் புதிதாக பெறும்போது விண்ணப்பதாரரின் பெயரில் எழுத்துப் பிழை (Spelling Mistake), முகவரியில் தவறு, பெண் விண்ணப்பதார்களின் கணவர் பெயரு்க்கு பதிலாக அவர்களின் தந்தை பெயர் இடம்பெறுவது என பல்வேறு குளறுபடிகள் நிகழ்வது தொடர்ந்து வருகிறது. இதற்கு பெரும்பாலும் விண்ணப்பதாரர்கள் காரணமாக இருப்பதில்லை. மாறாக, விண்ணப்ப விவரங்களை கணினியில் அப்டேட் செய்யும் பணியாளர்களின் கவனக்குறைவே காரணமாக உள்ளது.
முதல் சாய்ஸ்:
பெரிதாக கருதுவதில்லை: ஆதார் அட்டையை பெறும்போது அதில் தங்களது பெயரில் உள்ள எழுத்துப் பிழை உள்ளிட்டவற்றை பயனாளிகளும் சரிவர கவனிப்பதில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளையோ, வருமான வரி தாக்கல் செய்யும்போதோதான் வங்கிக் கணக்கு, பான் அட்டை ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள தங்களது பெயருடன் ஒப்பிடும்போது ஆதார் அட்டையில் எழுத்துப் பிழை நேர்ந்துள்ளதே அவர்களின் கவனத்து வருகிறது. உடனே ஆதாரில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள அரசின் இ- சேவை மையங்களை அணுகினால், அங்கு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக ஆதார் அப்டேட்களுக்கு பொதுமக்களின் முதல் சாய்ஸாக அஞ்சலகங்கள் உள்ளன.
அதுவும் ஆன்லைன் அப்டேட்டில் அவ்வளவாக ரிச்சயம் இல்லாத 40 வயகுக்கும் மேற்பட்டவர்களின் முதல் விருப்பமாக அஞ்சலகங்கள் திகழ்கின்ற. எளிதில் வேலை முடிந்துவிடும் என்று அங்கு சென்றால், பல அஞ்சலகங்களில் ஆதார் கவுன்ட்டரில் பணியாட்களே சரிவர இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டே பொதுமக்களின் அனுபவ மொழியாக உள்ளது. இதனால் ஆதாரில் தேவையான அப்டேட்களை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகும் பயனாளிகள், அரசின் நலத்திட்ட உதவிகளை உரிய நேரத்தில் பெற முடியாமலோ அல்லது முழுமையாக பெறவே முடியாமலோ போய்விடும் அவலநிலை தொடர்ந்து கொண்டுள்ளது.
கூடுதல் பணி:
‘ஆதார் அப்டேட் தங்களுக்கு கூடுதல் பணிதான்; இந்த பணியை மேற்கொள்ள அனேகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பணியாளருக்கு மட்டுமே தொழில்நுட்பரீதியாக அனுமதி (ACCESS) அளிக்கப்படுகிறது. உடல்நல குறைவு போன்ற காரணங்களால் குறிப்பிட்ட ஊழியர்கள் தொடர் விடுமுறை எடுக்க நேர்ந்தால் அவர் மீண்டும் பணிக்கு திரும்பும்வரை ஆதார் அப்டேட் செய்ய முடியாத நிலை இருக்கதான் செய்கிறது. இத்தகைய சூழலில் நாங்கள் அருகில் உள்ள வேறு அஞ்சலகத்தை அணுகும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்’ என்று கூலாக கூறுகின்றனர் அஞ்சலக பணியாளர்கள்.
டிஜிட்டல் இந்தியா:
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள அஞ்சலகங்களிலேயே இந்த நிலை என்றால், நாட்டில் உள்ள இரண்டாம் கட்ட நகரங்கள், சிறுநகரங்களில் ஆதாரில் அப்டேட் செய்ய பொதுமக்கள் படும்பாடு யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. டிஜிட்டல் இந்தியா… டிஜிட்டல் இந்தியா என பெருமை பேசிவரும் ஆட்சியாளர்கள்தான் இந்த பிர்ச்னைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பதே ஆதாரால் அலைக்கழிக்கப்படுவோரின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.