மதுரை: ”ஆறுமுகசாமி ஆணையத்தில் 7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பன்னீர்செல்வம் 8வது முறை ஆஜராகி அந்தர்பல்டி அடித்தது ஏன்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பன்னீர்செல்வத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சசிகலாவை மீண்டும் சந்திப்பேன் கட்சி ஒற்றுமையாக அறிவிப்பு கொடுக்கிறார். ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியவர்தான் இந்த ஓபிஎஸ். தற்போது அதே குடும்பத்தை நேரில் சந்தித்து கட்சியில் இணைவதற்கு அழைப்பு விடுப்பேன் என்கிறார். அவர் நிகழ்த்தி வரும் நாடகத்தை சிரிப்பதா அழுதா தெரியவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை தனக்கும், தன் பிள்ளைக்கும் குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக, அவர் நடத்தும் நாடகம் தான் அதிமுக ஒற்றுமையாக வர வேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பது.
சசிகலாவை சிறையில் தள்ளி, அவரை அரசியல் அனாதை ஆக்கியது பன்னீர்செல்வம் தான். ஓபிஎஸ் இந்த இயக்கத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்பதை அவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம். அவர் எடுத்து வரும் சித்து விளையாட்டுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் ஜெயலலிதாவே தப்ப முடியவில்லை.
ஜெயலலிதா மரணத்தின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி தற்போது முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவ குழு ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் எந்தவித சந்தேகம் இல்லை என்று தற்போது கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மறையும்போது கட்சியில் பிரிவினை நாடகத்தை அரங்கேற்றி ஜெயலிலதா மரணத்தில் மர்மம் என்று சொன்னவர் ஓபிஎஸ். நீதிபதி ஆறுமுகசாமி, துணை முதல்வராக ஓ.பன்னீசெல்வம் இருந்த போது, அவருக்கு ஏழுமுறை சம்மன் அனுப்பினார். ஏன் ஒருமுறை கூட நீதிபதி கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சி சொல்ல முன்வரவில்லை. பதவி போன பின்பு எட்டாவது முறையாக ஆஜராகி அந்தர் பல்டியாக தலைகீழாக மாற்று கருத்துக்களை சொன்னார்.
என்னோடு அரசியல் பயணம் செய்த அய்யப்பனை தன்னோடு இணைத்துக் கொண்டு, ஏதோ வெற்றி கொடி நாட்டியது போல் நினைத்துக் கொண்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிபட்டியில் போட்டியிட்ட லோகிராஜனை வெற்றி பெற செய்திருந்தால், நீங்கள் அதிமுகவில் உண்மையான தொண்டன் என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் உசிலம்பட்டி தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்க வேண்டும் என ஒற்றைக் காலில் தவம் இருந்தவர் நீங்கள்.
நானோ இந்த அய்யப்பனுக்காக உசிலம்பட்டி சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ்ஸிடம் எடுத்துச் சென்று, பரிந்துரை செய்தேன். நீங்கள் அவருக்கு பரிசீலனை செய்யவில்லை என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.
இன்றைக்கு வெற்றி பெற்று வந்தவரை வேடன் விரித்த வலையில் மாட்டிய மணிப்புறா போன்று நீங்கள் செய்துள்ளீர்கள். இதன்மூலம் எந்த பின்னடைவும் எனக்கு வரவில்லை. அதிமுகவை உங்கள் குடும்ப சொத்தாக நினைப்பதை ஒருபோதும் நான் இருக்கும் வரை நடக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.