ஜெய்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ராமர் கதை என்ற ஆன்மீக நிகழ்வு நடத்தப்பட்டு வருவது பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருபவர் கல்ராஜ் மிஸ்ரா. பாரதிய ஜனதா கட்சியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தவர்.
இமாச்சல பிரதேச ஆளுநராக பதவி வகித்து பின்னர் ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டவர். இவர் தெரிவித்து வரும் கருத்துக்கள் அவ்வப்போது அரசியல் அரங்கில் சர்ச்சைகளை ஏற்படுத்தும்.
ராமர் கதை நிகழ்வு
இந்த நிலையில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநில ஆளுநர் மாளிகையில் “ராமர் கதை” என்ற நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு உரிய கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால், ராஜஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இந்த நிகழ்வை ஊக்குவிப்பதாக சில சமூக அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். முன்னாள் நிர்வாகி
இது தொடர்பாக மாநில பாஜகவும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகின்றது. அதேநேரம் சனிக்கிழமை தொடங்கிய இந்த நிகழ்வில் பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பரப்புரையாளராக இருந்த விஜய் கௌசல் கலந்துகொண்டு ராமர் கதையை கூறினார்.
சனிக்கிழமை தொடங்கிய நிகழ்ச்சி
இந்த நிகழ்வு விஜய் கௌசலின் யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் உரிய அடையாள அட்டைகளை காட்டி இதில் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இந்து முறைபடி பூஜைகளை செய்தார்.
இந்துமத கண்காட்சி
அத்துடன் “பக்தி கலா பிரதார்ஷனி” என்ற பெயரில் ஆன்மீக ஓவியங்கள், ஆன்மீக கலைபொருட்களை கொண்ட கண்காட்சியையும் ஆளுநர் மாளிகையில் அவர் தொடங்கி வைத்தார். முதல்நாள் நிகழ்வில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் கன்ஷியாம் திவாரி, ஜெய்பூர் எம்.பி. ராம்சரன் போரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எதிர்ப்பு
குறிப்பிட்ட மதம் சார்ந்த இந்த நிகழ்ச்சியை ஆளுநர் மாளிகையில் நடத்தக்கூடாது என்றும், வேறு இடத்துக்கு இதை மாற்ற வேண்டும் எனவும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல் மாநில அரசும் இதற்கு எந்தவிதமான நிதியுதவியும் வழங்கக்கூடாது என்றும் அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவோ, “ராமர் கதை” வாழ்வை வளமாக்கும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.