கணவன் மனைவி இடையேயான சண்டைகள் எல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல வழக்கமான ஒன்றாகும். சண்டை முற்றிப்போனால் அதிகபட்சம் சில நாட்களுக்கு பேசாமல் இருப்பார்கள் அல்லது தனித்து இருப்பார்கள். ஆனால் உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஒரு தம்பதியின் சண்டை சற்று விசித்திரமானதாக இருக்கிறது.
தினந்தோறும் மனைவி சண்டையிடுவதால் வேறு வழியில்லாமல் 100 அடி உயரத்தில் இருக்கு பனை மரத்தில் அந்த கணவர் குடியேறியிருக்கிறாராம். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவ விடப்பட்டிருக்கிறது.
அதன்படி, உத்தரபிரதேசத்தின் மவு மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ்ஷுக்கும் அவரது மனைவிக்கும்தான் தினசரி தகராறு ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் கொடுமை தாங்காமல் வீட்டின் அருகே இருக்கும் பனை மரத்தில் ஏறி அங்கேயே தங்கிவிட்டார் ராம் பிரவேஷ்.
இதனால் இயற்கை உபாதை கழிக்க மட்டுமே கீழே இறங்குவாராம். உணவெல்லாம் கயிறு கட்டி மேலே கொடுக்கப்பட்டுவிடும் என ராம் பிரவேஷின் தந்தை வின்சுராம் கூறியிருக்கிறார். இதில் சர்ச்சை ஆவதற்கான காரணம் என்னவென்றால் ராம் பிரவேஷ் தங்கியிருக்கும் பனை மரம் அந்த கிராமத்தின் நடுப்பகுதியில் இருக்கிறதாம்.
மேலே இருந்து பார்த்தால் கிராமத்தில் உள்ள வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பது அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிந்துவிடுமாம். இது பெண்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இதனால் மரத்தில் இருந்து இறங்குமாறு ராம் பிரவேஷிடம் பல முறை கிராமத்தினர் கூறியும் விடாபிடியாக அவர் மறுத்திருக்கிறார்.
இதனையடுத்து போலீசிடமும் கிராமத்தினர் புகார் கொடுத்திருக்கிறார்கள். போலீசாரும் விரைந்து வந்து பேசிப் பார்த்தும் பயனில்லாமல் போய்விட்டது. இதனால் அங்கு நடப்பதை வீடியோவாக எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். இது தொடர்பாக பேசியுள்ள பரசத்புர் கிராமத்தின் தலைவர் தீபக் குமார், “கிராமத்தின் மையத்தில் இருக்கும் மரத்தில் ராம் பிரவேஷ் வசிப்பது பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அசவுகரியத்தை கொடுத்துள்ளது. ஆகையால் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறோம்.” என்றிருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாக ராம் பிரவேஷ் மரத்திலேயே வசித்து வருவதால் கிராம மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM