ஸ்ரீநகர்: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்ப்பதற்கு ஸ்ரீநகரில் உள்ள கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட ஆறு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
இன்று ‘ஏ’ பிரிவில் நடக்கும் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி மாணவர்களுக்கு பிறப்பித்த உத்தரவு: துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் பல நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த போட்டியை விளையாட்டாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மாறாக, கல்லூரி வளாகம் மற்றும் விடுதியில் எந்தவித ஒழுங்கீன செயலிலும் ஈடுபடக்கூடாது.
இன்று நடக்கும் போட்டியின் போது மாணவர்கள் அமைதியாக விடுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டும். மற்ற மாணவர்கள் அறைகளுக்கு செல்லக்கூடாது. கும்பலாக அமர்ந்து போட்டியை பார்க்கக்கூடாது. இந்த தடையை மீறி, அறையில் அமர்ந்து போட்டியை பார்த்தால், அந்த மாணவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவதுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். போட்டி தொடர்பாக, சமூக வலைதளங்களில் எந்தவிதமான கருத்தையும் பகிரக்கூடாது. முக்கியமாக, போட்டி நடக்கும் நேரத்தில் விடுதி அறையை விட்டு வெளியே வரக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு, டுவென்டி-20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீசை, இந்தியா தோற்கடித்தது. அப்போது, இந்த கல்லூரியில், உள்ளே இருந்து மற்றும் வெளியில் இருந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதனையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement