ஐடி நிறுவனமான காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனம், ஜூன் காலாண்டில் வரலாறு காணாத அளவில் அட்ரிஷன் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
காக்னிசண்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3, 41,000 பேராகும்.
கடந்த ஜூன் காலண்டு முடிவில் மட்டும் 1.2 லட்சம் பேர் தங்களது வேலையினை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 36% பேர் அதிகம் என்றும் கூறப்படுகின்றது.
ஐடி ஊழியர்களுக்கு இது எச்சரிக்கையா.. ஐடி துறையில் நடப்பது என்ன?
ஊழியர்கள் வெளியேற்றம்
ஐடி நிறுவனங்கள் பலவும் மந்த நிலைக்கு மத்தியில் மெதுவான வளர்ச்சியினை சுட்டிக் காட்டி வருகின்றன. குறிப்பாக காக்னிசண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மெதுவான வேகத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிபார்ப்புக்கு மத்தியில் தான் இந்த ஊழியர்கள் வெளியேற்றம் என்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வலுவான செயல்திறன்
பல்வேறு சவால்களை காக்னிசண்ட் நிறுவனம் எதிர்கொண்டு வந்தாலும், இந்த நிறுவனம் வலுவான செயல்பாட்டின காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது காக்னிசண்டின் செயல்திறன் வலுவானதாகவே உள்ளது என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன.
பிரச்சனை தான்
எனினும் அடுத்து வரும் காலாண்டுகளில் காக்னிசண்ட் இன்னும் தடுமாற்றத்தினை எதிர்கொள்ளலாம். குறிப்பாக பல உயர் அதிகாரிகள், மூத்த பணியாளர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியேறியுள்ளனர். இது நிறுவனத்தின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதனால் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் இருந்து விலகி இருக்க வழிவகுக்கலாம்.
வருவாயில் தாக்கம் இருக்கலாம்
இது வருவாயிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் நிகர லாபம் ஜுன் காலாண்டில் 577 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 12.7% அதிகமாகும். அதே சமயம் அட்ரிஷன் விகிதமும் அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் மிக அதிகமாகும்.
டெக் மகேந்திரா
இதே மற்ற போட்டி நிறுவனங்களாக டெக் மகேந்திரா முதல் காலாண்டில் 6862 ஊழியர்களை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் மொத்த ஊழியர்களின் விகிதம் 1,58,035 பேராகும். இதன் அட்ரிஷன் விகிதம் 24%ல் இருந்து 22% ஆக குறைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையானது 3,35,186 பேராகும். இதே ஜூன் காலாண்டில் 21,171 ஊழியர்களை சேர்த்துள்ளது. இது அட்ரிஷன் விகிதம் 28.4% ஆக அதிகரித்துள்ளது. இதே 4வது காலாண்டில் 27.7% ஆக இருந்தது.
விப்ரோ
விப்ரோ நிறுவனம் முதல் காலாண்டில் 15000 ஊழியர்களைக் சேர்த்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 258574 பேராகும். இதன் அட்ரிஷன் விகிதம் 23.3% ஆக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 23.8% ஆக இருந்த நிலையில் சற்று குறைந்துள்ளது.
ஹெச்சிஎல்
ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனம் முதல் காலாண்டில் 2089 ஊழியர்களை அதன் தொகுப்பில் சேர்த்துள்ளது. இதன் அட்ரிஷன் விகிதம் 23.8% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 21.9% ஆக இருந்தது.
டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 14,136 ஊழியர்களை சேர்த்துள்ளது. இதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது 6,06,331 பேராகும். சர்வதேச அளவில் அதன் மொத்த ஊழியர்கள் தொகுப்பில் 35.5% பேர் பெண் ஊழியர்களாகும். இதன் அட்ரிஷன் விகிதம் 17.4% ஆக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டில் 19.7% ஆக இருந்தது.
Cognizant reported that 1.2 lakh employees resigned in the June quarter
Cognizant reported that 1.2 lakh employees resigned in the June quarter/இந்த வேலையே வேண்டாம் என விட்டு சென்ற 1.2 லட்சம் பேர்.. காக்னிசண்ட்டின் தற்போதைய நிலை?