உங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை:
ங்கள் சொற்படியே நடக்கிறேன்… அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

திமுகவின் செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி திமுக தலைவராக பொறுப்பேற்றார். அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் திமுக தலைவராக பொறுப்பேற்று 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே, முதல்வர்களில் மூத்தவரே, கலையுலக வேந்தரே, எங்களின் உயிரே, உணர்வே தாங்கள் வகித்த தி.மு.க. தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் என கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார்.

ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள் என தெரிவித்துள்ளார். இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் தொண்டர்களையும், தொ.மு.ச நிர்வாகிகளையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.