சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சொற்படியே நடப்பதால், தான் வென்றபடியே இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தகைசால் தந்தையே , தன்னிகரற்ற தலைவரே, முதல்வர்களில் மூத்தவரே, கலையுலக வேந்தரே, எங்களின் உயிரே, உணர்வே, தாங்கள் வகித்த திமுக தலைவர் பொறுப்பில் நான் அமர்ந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.
ஒவ்வொரு அடியும் – நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்.மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.28-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுக தலைவராக அவர் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 5-ம் ஆண்டு தொடங்குகிறது.
இதனையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திமுக மூத்த தலைவர்களும் தமிழக முன்னாள் முதல்வர்களுமான அண்ணா, கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி இன்று மரியாதை செலுத்தினார்.