மதுரை: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நெருக்கமான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் திடீரென்று ஓபிஎஸ் அணிக்கு தாவியது, மதுரை மாவட்ட இபிஎஸ் அணி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் முக்கிய அதிகார மையங்களாக உள்ளனர். மூவரும் தற்போது எம்எல்ஏ-க்களாகவும், மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். ஆட்சிக்கு வந்தால் அமைச்சர், எம்எல்ஏ, மேயர் என்றும், கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இவர்கள் உள்ளனர்.
மூவருக்கும் இடையே வெளிப்படையாகவே கோஷ்டி பூசல் இருந்தாலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரே அணியாக இபிஎஸ் பக்கம் இருந்து வருகின்றனர். அதனால், மதுரை மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு பெரிய செல்வாக்கு இல்லாததுபோன்ற பிம்பம் இருந்து வருகிறது.
ஓபிஎஸ் – இபிஎஸ் விரிசலுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தினமும் ஓர் அறிக்கைவிட்டு ஓபிஸை அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கடுமையாக தாக்கியும், நெருக்கடியும் கொடுத்து வருகிறார்.
அதனால், ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியை இபிஎஸ், ஆர்பி.உதயகுமாருக்கு வழங்கினார். அந்தளவுக்கு இபிஎஸ்-க்கு ஆர்பி.உதயகுமார் விசுவாசமாகவும், நெருக்கமாக இருந்து வருகிறார். அதனாலேயே, தனது புறநகர் மேற்கு மாவட்டத்தை தாண்டி, மற்ற மாவட்டங்களிலும் ஆர்.பி.உதயகுமார் சிபாரிசு செய்த பலருக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ் சீட் வழங்கினார்.
அப்படி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரால் அடையாளம் காட்டப்பட்ட உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்தான், நேற்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவரது அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அய்யப்பனின் இந்த அணி மாற்றம், மதுரை மாவட்ட இபிஎஸ் அணி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ”அய்யப்பன், ஆர்.பி.உதயகுமாரின் தீவிர விசுவாசி. அதனாலேயே, அவர் அவருக்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்தார். அய்யப்பன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்கானூரணியை சேர்ந்தவர். அப்படியிருந்தும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அய்யப்பனுக்கு சீட் பெற்றுக் கொடுத்தார். தொகுதி மாறி அவர் போட்டியிட்டதால் உசிலம்பட்டி தொகுதி அதிமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதை ஆர்.பி.உதயகுமார் சாதுர்யமாக சமாளித்து அதிருப்தி நிர்வாகிகளை சரிக்கட்டி தேர்தல் பணி பார்க்க வைத்தார். ஆனாலும், அந்தத் தேர்தலில் தொகுதிக்கும், கட்சி தொண்டர்களுக்கும் பெரிய அறிமுகமே இல்லாத ஐய்யப்பன் வெற்றிபெற வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது. அமமுக வேட்பாளர் மகேந்திரனும், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கதிரவனுக்குமே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
டிடிவி தினகரனும் உசிலம்பட்டி தொகுதி வெற்றி வாய்ப்பை பெரிதும் நம்பினார். ஆனால், அவர்களையும் மீறி மும்முனைப் போட்டியில் அய்யப்பன் யாருமே எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். அதனால், அய்யப்பன் ஆர்.பி.உதயகுமாருக்கு இன்னும் விசுவாசமானார். தனது உசிலம்பட்டி தொகுதியை மறந்து திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமாரின் நிழலாக அவரை பின்தொடர்ந்தார். இதனால், அய்யப்பன் மீது உசிலம்பட்டி அதிமுகவினர் மட்டுமில்லாது தொகுதி மக்களும்கூட அதிருப்தியடைந்திருந்தனர்.
ஆனாலும், அவர் தன்னை வளர்த்துவிட்ட ஆர்.பி.உதயகுமாருடன் சென்றார். உசிலம்பட்டியில் அய்யப்பனை வெற்றி பெற வைத்ததால் கட்சி மேலிடத்தில் ஆர்.பி.உதயகுமார் செல்வாக்கு உயர்ந்தது. கட்சி நிர்வாகிகளிடம் எளிமையாகவும், அனுசரணையாகவும் பழகக்கூடிய ஆர்.பி.உதயகுமார்.
ஆனால், சமீப காலகமாக அவர் கட்சி நிர்வாகிகளை ஒருமையில் பேசத்தொடங்கினார். அதனால், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களே அவரை விட்டு போய்விட்டனர். ஒரு கட்டத்தில் அய்யப்பனுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்குமே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாதமாகவே ஐய்யப்பன், ஆர்.பி.உதயகுமாருடன் சென்றாலும் இருவருக்கும் இடையே திரைமறைவு கருத்துவேறுபாடுகள் இருந்தது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட ஓபிஎஸ் தரப்பு, ஐய்யப்பனை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டனர்.
மேலும், ஓபிஎஸ்ஸை கடுமையாக தாக்கி வந்த ஆர்.பி.உயதயகுமாருக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கவே அவரது பக்கத்தில் இருந்த ஐய்யப்பனை ஓபிஎஸ் தரப்பினர் தன் பக்கம் இழுத்துக்கொண்டனர்,” என்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தரப்பில் விசாரித்தபோது, ”மதுரை மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தொண்டர்கள் பலமே இல்லை. 90 சதவீதம் நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் உள்ளனர். அதனாலேயே, ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், மதுரை மாவட்ட நிர்வாகிகளுக்கு பணத்தாசை காட்டியும், மத்திய அரசுக்கு தங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்காலத்தில் கட்சி தங்கள் கைக்குதான் வந்துவிடும் என்றும், தற்போது எங்கள் பக்கம் வந்தால் நல்ல பொறுப்புகளை தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி வருகின்றனர். அப்படியிருந்தும் ஒரு சிலரே அவர்கள் பக்கம் சென்றுள்ளனர். அப்படிதான் அய்யப்பனும், தன்னுடைய கடன் நெருக்கடியை சமாளிக்கவே அங்கு சென்றுள்ளார்” என்றனர்.