எதிர்க்கட்சி ஆட்சிகளை கவிழ்க்க ரூ.6,300 கோடி செலவிட்டதால்தான் அரிசிக்கு ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டது: பாஜ மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க, ரூ.6,300 கோடியை பாஜ செலவு செய்ததால்தான், அதை ஈடுகட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.

தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜ.வை, ‘மாநில அரசுகளை கவிழ்க்கும் சீரியல் கொலைகாரன்’ என அவர் குற்றம்சாட்டி உள்ளார்.இந்நிலையில், நேற்று தனது டிவிட்டரில் கெஜ்ரிவால், ‘தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு ஒன்றிய அரசுக்கு ரூ.7,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். ஏற்கனவே அவர்கள் மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க ரூ.6,300 கோடியை செலவழித்து விட்டார்கள்.

அதை அவர்கள் செலவழிக்காமல் இருந்திருந்தால், உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. மக்களும் இப்பொருட்களின் விலை உயர்வை சந்தித்து இருக்க மாட்டார்கள்’ என கூறி உள்ளார். மேலும், தனது தொகுதியில் நேற்று பேசிய கெஜ்ரிவால், ‘பிற கட்சிகளின் எம்எல்ஏக்களை வேட்டையாட, ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு மூலம் கிடைத்தை பணத்தை பாஜ பயன்படுத்துகிறது,’ என குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.