புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவில் கூறியிருப்பதாவது:
தயிர், மோர், தேன், கோதுமை, அரிசி மீது மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விதித்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7,500 கோடி வருவாய் கிடைக்கும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கவிழ்க்க பாஜக இதுவரை ரூ.6,300 கோடி செலவிட்டுள்ளது. இதுபோல எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை கவிக்காமல் இருந்தால், தயிர், மோர் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரி விதித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பணவீக்கத்தை மக்கள் சந்தித்திருக்கவும் மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.