தான் முதல்வராகவோ கட்சி தலைவராகவோ, வர ஆசைபடவில்லை என்றும், கட்சி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் ஒ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் தலைமையில் பெரியகுளம் அருகே உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் ஓபிஎஸை சந்தித்து 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார் ஓபிஎஸ். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது. ஏன் ஏற்பட்டது, யாரால் ஏற்பட்டது என்பதை தொண்டர்கள் மறக்கக்கூடாது.
பேரறிஞர் அண்ணா கூறியபடி எதிர்க்கட்சியாக இருக்கும் போது சகிப்புத்தன்மையோடும் பக்குவத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் வகுத்து தந்த பாதையில் அனைவரும் உண்மையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேவையற்ற குற்றச்சாட்டுகளை அபாண்டமான குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைந்து பணியாற்றியவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு, கூச்சல் குழப்பங்கள் மத்தியிலும் ரௌடிகள் கேடிகளால் கூட்டப்பட்டது, வரம்பு மீறிய செயல்கள் அந்த பொதுக்குழுவில் அரங்கேறியது. தொண்டர்கள் எனது பக்கம் உள்ளார்கள். குண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் ஜானகி அணி – ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது திமுக ஆட்சியை கைப்பற்றியது. அப்படி இப்போதும் ஆகிவிடாமல் இருக்க, பொறுமையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றி வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம்.
நான் என்றுமே முதல்வர் பதவிக்கோ, கட்சியின் தலைமை பதவிக்கோ ஆசைப்படவில்லை. ஒற்றுமையாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதே எனது எண்ணம்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM