சென்னை : நடிகர் சூரி முன்னதாக அதிகமான படங்களில் தலையை காட்டியிருந்தாலும் வெண்ணிலா கபடிக் குழு படம் இவருக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது.
Recommended Video
தொடர்ந்து நாயகர்களுக்கு கைக்கொடுக்கும் தோழனாக பல படங்களில் நடித்துள்ளார் சூரி. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவரது காம்பினேஷன் சிறப்பாக வொர்க் அவுட் ஆனது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார் சூரி.
நடிகர் சூரி
நடிகர் சூரி கோலிவுட்டின் சிறப்பான காமெடியனாக பல ஆண்டுகள் கோலோச்சி வருகிறார். இவரது டைமிங் மற்றும் இயல்பான காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் செய்த காமெடிகள் வேற லெவல்.
பரோட்டா சூரி
முன்னதாக சூரியை அனைவருக்கும் சிறப்பாக அறிமுகப்படுத்திய படம் என்றால் அது வெண்ணிலா கபடிக்குழு படம்தான். இந்தப் படத்தில் இவர் செய்த பரோட்டோ காமெடி எவர்கிரீன் ரகம். மேலும் இந்தப் படத்தில் இவர் சிறப்பான கேரக்டரையும் ஏற்று நடித்து, கபடி ஆட்டத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார்.
சூரியின் சிக்ஸ் பேக்ஸ்
தொடர்ந்து இவரது நடிப்பில் நல்ல படங்கள் வெளியாகி ரசகிர்களை வெகுவாக கவர்ந்தது. சீம ராஜா படத்தில் இவரது சிக்ஸ் பேக்கை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்துவார். காமெடியன்தானே, உடல் லூசாக இருந்தாலும் பரவாயில்லை என்ற கருத்தை மாற்றிக் காட்டியவர் சூரி. பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஹீரோவாக நடிக்கும் சூரி
இந்நிலையில் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தில் இவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் அண்ணாத்த படம்
தொடர்ந்து பல கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சூரி. சமீபத்தில் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்து வெளியான அண்ணாத்த படத்திலும் இவரது நடிப்பு கவனம் பெற்றது. கிராமத்து கதாபாத்திரங்களில் காமெடியனாக கலக்கி வரும் சூரி, கேரக்டர் ரோல்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
விருமன் படம்
சமீபத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான விருமன் படத்திலும் சூரியின் கேரக்டர் கவனம் பெற்றுள்ளது. வழக்கம்போல ஹீரோவுக்கு சப்போர்ட் செய்யும் கேரக்டரில் சூரி நடித்திருந்தாலும் மாற்றுத் திறனாளியாக இவர் நடித்திருந்த கேரக்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சூரி பட்ட கஷ்டங்கள்
இந்நிலையில் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைப்பதற்கு முன்பு தான் கண்ட போராட்டங்கள் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் சூரி. தீபாவளி படமே தனக்கு ஓரளவிற்கு அங்கீகாரத்தை கொடுத்ததாக கூறியுள்ள சூரி, தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி, சினிமாவில் வாய்ப்பிற்காக தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.
7 வருடங்கள் வீட்டிற்கு செல்லாத சூரி
வீட்டை விட்டு சென்னைக்கு வந்த தான், 7 வருடங்கள் வீட்டிற்கே செல்லவில்லை என்றும், பேருந்து பயணத்திற்கு தன்னுடைய நண்பர்கள் பணம் தருவார்கள் என்றாலும், அத்தனை ஆண்டுகாலம் கழித்து வீட்டிற்கு செல்லும்போது ஏதாவது வாங்கிக் கொண்டு போக வேண்டுமே என்ற பரிதவிப்பிலேயே தான் 7 ஆண்டுகள் ஊருக்கு போகாமல் கழித்ததாக தெரிவித்தார்.
தாயின் கதறல்
யாரிடமோ செல்போனை வாங்கி தனக்கு தன்னுடைய அம்மா போன் செய்து, சாப்பிட்டாயா என்று கேட்க, தானும் வாய் தவறி, எங்க சாப்பிட்டேன், தண்ணீர்தான் குடித்துவிட்டு படுத்திருக்கிறேன் என்று கூற, அவர் கதறிய கதறலையும் சூரி தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சூரியின் பிறந்தநாள்
நேற்றைய தினம் சூரி தன்னுடைய 45வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவருக்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் சினிமாவில் தான் ஒரு நிலையை அடைய அவர் அடைந்த துன்பங்களை பகிர்ந்துள்ளது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.