சென்னை: இளைஞர்கள் 17 வயது முடிந்தால், முன்கூட்டியே பதிவு செய்துவாக்காளர் அட்டை பெற முடியும் என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தெரிவித்தார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரைப் போட்டி, பேச்சு போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது:
தேர்தலின் தொடக்க காலங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. தற்போது மொத்தம் உள்ள வாக்காளர் பட்டியலில் 50 சதவீதம் பேர் பெண்கள். இப்போது பெண்கள் அதிக அளவில் ஜனநாயகத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
ஒவ்வொரு வாக்காளரும் தேர்தலில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்காளர் பெயர்கூட தேர்தலில் ஓட்டு அளிப்பதில் இருந்து விடுபடக்கூடாது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால், உலகின் மிகவும் இளமையான நாடாகவும் இந்தியா உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டுகளில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளிவரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம், இப்பட்டியலில் அதிக வாக்காளர்கள் இடம்பெறமுடியும்.
சினிமா டிக்கெட்டை முன்பதிவு செய்வதுபோல, 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்காக முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். 18-வது பிறந்தநாளில் வாக்காளர் அடையாள அட்டை உங்கள் வீட்டுக்கே பரிசாக வந்து சேரும். எனவே, 17 வயது பூர்த்தியானவர்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டைக்காக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஓர் இளைஞரின் வாக்கைக்கூட தவறவிட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.