தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள தனியார் மகாலில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுப்பது குறித்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், உச்சிப்புளி, முதுகுளத்தூா், கமுதி, பரமக்குடி மற்றும் திருவாடானை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 63 ஆண்கள் உள்பட 71 போ் கலந்து கொண்டனா்.
அப்போது அவா்கள், போதைப் பொருள்களை இனிமேல் எப்போதும் விற்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மேலும், கஞ்சா மற்றும் போதை வஸ்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தெரிவித்துள்ளதாவது,
“பொது இடங்களிலோ, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ கஞ்சா விற்பனை செய்வதாக ஏதேனும் தகவல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஹலோ போலீஸ் பிரத்யேக எண் 8300031100-க்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”. என்று தெரிவித்துள்ளார்.