காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் அண்மையில் விலகிய நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.ஏ.கான் விலகினார். இது காங்கிரஸ் கட்சிக்கு மேலுமொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏம்.ஏ.கான் தெலங்கானாவைச் சேர்ந்தவர். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர். சிறுபான்மையினர் ஆதரவு பெற்றவர். இந்நிலையில் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்தையும் துறந்து கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
ராகுல் மீது புகார்: ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் கட்சியின் வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியின் சிறுபிள்ளைத்தனமே காரணம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் எம்.வி.கானும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த எம்.வி.கான், “கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏனென்றால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தத் தயாராக இல்லை.
நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி தலைமையில் கட்சி என்னமாதிரியாக இயங்கியதோ அதேபோன்று இப்போது கட்சியை இயக்கும் தலைவர்கள் இல்லை. அதனாலேயே நான் கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்பதை நிறுத்திக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ஆன பின்னர் அவர் தன்னிச்சையாகவே செயல்பட ஆரம்பித்துவிட்டார். அவருடைய சிந்தனைகள் வேறாக உள்ளன. அதி கட்சியின் அடிமட்ட தொண்டர் முதல் உயர்மட்டக் குழுவினர் வரை யாருக்கும் உடன்பாடில்லை. இதன் விளைவுதான் காங்கிரஸின் வீழ்ச்சி. அதனாலேயே கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த மூத்த தலைவர்கள் கூட கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு மூத்த தலைவர்களுடன் பழகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி தனது பழைய பெருமையை மீட்டெடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று பொதுமக்களை நம்பவைக்க முற்றிலும் தவறிவிட்டது” என்று கூறியுள்ளார்.