கரிம் பென்சிமா, அலெக்சியா புதேயாஸ்; ஐரோப்பாவின் சிறந்த வீரர்கள்; தொடங்குகிறதா புதிய அத்தியாயம்?!

ஐரோப்பியக் கால்பந்து கூட்டமைப்பான UEFAவின் இந்த ஆண்டுக்கான விருதுகள் வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் சிறந்த வீரருக்கான விருதை ரியல் மாட்ரிட் ஃபார்வேர்ட் கரிம் பென்சிமா வென்றார். பெண்கள் பிரிவில் பார்சிலோனா மிட்ஃபீல்டர் அலெக்சியா புதேயாஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றிருக்கிறார். இவர்களின் வெற்றி ஆண்கள் பிரிவில் மெஸ்ஸி – ரொனால்டோ ஆதிக்கமும், பெண்கள் பிரிவில் லயான் – வோல்ஸ்பெர்க் வீராங்கனைகளின் ஆதிக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவருகிறதா என்ற விவாதம் கிளம்பியிருக்கிறது.

2021-22 சீசனில் தன் உச்சபட்ச ஃபார்மைத் தொட்டார் கரிம் பென்சிமா. ரியல் மாட்ரிட் அணிக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் கோல் மழையாகப் பொழிந்தார். மெஸ்ஸி, ரொனால்டோ, லெவண்டோஸ்கி, எம்பாப்பே, நெய்மர் என உலகம் வியந்த அத்தனை ஸ்டிரைக்கர்களை விடவும் சிறப்பாகச் செயல்பட்டார். லா லிகா, சாம்பியன்ஸ் லீக் என இரண்டு பெரும் தொடர்களை வெல்வதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார்.

கரிம் பென்சிமா | Karim Benzema

32 லா லிகா போட்டிகளில் விளையாடிய பென்சிமா 27 கோல்கள் அடித்தார். ஒரு லா லிகா சீசனில் அவர் அதிக கோல்கள் அடித்தது இந்த சீசனில் தான். ஆனால் அவருடைய பங்களிப்பு கோல்களோடு முடிந்துவிடவில்லை. 12 அசிஸ்ட்களும் செய்திருந்தார் அவர். இளம் விங்கர் வினிசியஸ் ஜூனியரோடு அவர் அமைத்த பார்ட்னர்ஷிப் எதிரணிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக அமைந்தது. அதுவே, சாம்பியன்ஸ் லீக் தொடரில் அந்த அணி ஒவ்வொரு முறையும் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய அவர், 15 கோல்கள் அடித்ததோடு 2 அசிஸ்ட்களும் செய்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தவரை அவரது நிழலிலேயே இருந்த பென்சிமா, அதன்பிறகு தன் ஆட்டத்தைப் பெருமளவு மாற்றினார். ரொனால்டோவின் இடத்தை அவரே நிரப்பினார். கடந்த 4 லா லிகா சீசன்களிலுமே 20 கோல்களுக்கு மேல் அடித்து அசத்தினார். இருந்தாலும் 34 வயதில் அவருடைய மிகச் சிறந்த சீசன் அமையும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கடைசியாக 2016-17 சீசனுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA பெஸ்ட் பிளேயர் விருதை வென்றிருந்தார். அதன்பிறகு அவரோ மெஸ்ஸியோ இந்த விருதை வெல்லவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் டாப் 4 இடங்களிலாவது இருவரும் இடம்பெற்றுவிடுவார்கள். ஆனால், இந்த முறை டாப் 15 இடங்களில் கூட இருவரும் இல்லை. இதன்மூலம் அந்த இரு மகத்தான ஜாம்பவான்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியன் எம்பாப்பே, நெய்மர் இருவருக்கும் அடுத்தே மெஸ்ஸி முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த சீசன் அவருடைய செயல்பாடு மிகவும் சுமாராகவே இருந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடட் அணியோடு சேர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார். அதனால், இது நிச்சயம் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது!

அலெக்சியா புதேயாஸ், கரிம் பென்சிமா | Alexia Putellas, Karim Benzema

பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் லயானஸ், வோல்ஸ்பெர்க், எய்ன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் அணி வீராங்கனைகள்தான் பெரிதாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். 2016-17 சீசனில் மட்டும் பார்சிலோனா வீராங்கனை லீகி மெர்டன்ஸ் வென்றிருந்தார். அதன்பிறகு மீண்டும் லயான், வோல்ஸ்பெர்க் தான். ஆனால் இப்போது அதை மாற்றியிருக்கிறார் அலெக்சியா புதேயாஸ். பார்சிலோனா அணியின் மையப்புள்ளியாக விளங்கிவரும் அவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பியக் கால்பந்தில் கோலோச்சிவருகிறார். பெண்கள் லா லிகா பார்சிலோனா இரண்டாவது ஆண்டாக வெல்வதற்கும், கடந்த சாம்பியன்ஸ் லீக் தொடரை அந்த அணி வெல்வதற்கும் மிகமுக்கியக் காரணமாக இருந்திருக்கிறார் அவர். கடந்த ஆண்டு பாலன் டி ஓர், ஃபிஃபா பெஸ்ட் பிளேயர், UEFA பெஸ்ட் பிளேயர் என அனைத்து விருதுகளையும் அள்ளியவர், இப்போது இரண்டாவது சுற்றைத் தொடங்கியிருக்கிறார்!

பென்சிமா, புதேயாஸ் இருவரின் வெற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தாலும் கடைசியில் இந்த விருதுகள் மீண்டும் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா வீரர்களின் கைகளுக்கு வந்திருப்பது பெரிதாக எதுவும் மாறவில்லை என்றும் கூறுகிறது.

பயிற்சியாளர்களில் ஆண்கள் பிரிவில் ரியல் மாட்ரிட்டின் கார்லோ ஆன்சலோடி இவ்விருதை வென்றார். ரியல் மாட்ரிட் அணி லா லிகா தொடரைப் பெரிதாகப் போட்டி இல்லாமல் வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்றதற்கு டான் கார்லோவின் மாஸ்டர் பிளான்களும் பெரும் காரணம். செல்சீ, மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்கு எதிரான காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் தோல்வியின் விளிம்பிலிருந்த அணியை தன் அபார மாற்றங்கள் மூலம் மீண்டு வர வைத்தார். வயசானாலும் தன் கோல்டன் டச் இன்னும் தன்னை விட்டுப் போகவில்லை என்று நிரூபித்தார்.

அலெக்சியா புதேயாஸ், கரிம் பென்சிமா | Alexia Putellas, Karim Benzema

பெண்கள் பிரிவில் இங்கிலாந்து தேசிய அணியின் பயிற்சியாளர் செரீனா விகமென் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை வென்றார். 2022 பெண்கள் யூரோ தொடரை இங்கிலாந்து அணி வென்று அவர்களின் கோப்பை தாகத்தைத் தீர்க்கக் காரணமாக அமைந்தார். முந்தைய யூரோ தொடரை நெதர்லாந்து அணி வெல்லும்போதும் இவர்தான் பயிற்சியாளராக இருந்தார். தொடர்ந்து இரண்டு தொடர்களை, இரு வேறு தேசிய அணிகளுக்காக வெல்லும் அசாதாரணமான விஷயத்தைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நெதர்லாந்தைச் சேர்ந்த செரீனா. இங்கிலாந்து அணியில் இவர் கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள், அந்த அணியைத் தைரியமாக அவர் விளையாட வைத்த விதம், இங்கிலாந்தில் பெண்கள் கால்பந்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.