தமிழ்நாட்டில் கோபாலபுரம் என்கிற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். இதற்கு காரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சொந்தமான வீடு கோபாலபுரத்தில் தான் அமைந்துள்ளது.
தமிழக அரசியல் சதுரங்கத்தில் கோபாலபுரத்தில் இருந்துகூட காய்கள் நகர்த்தப்பட்டதாக அடிக்கடி கூறப்படுவது வழக்கம். அதே சமயம் எச்.ராஜா, அண்ணாமலை போன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் வசைபாட்டுக்கும் கோபாலபுரம் சிக்குவது உண்டு.
அந்தளவுக்கு புகழையும், பெருமையையும் பெற்று தந்த இந்த வீட்டை சரபேஸ்வரர் என்பவரிடம் இருந்து கடந்த 1955ம் ஆண்டு
வாங்கினார். விலைக்கு வாங்கி விட்டாலும் சரபேஸ்வரர் பேத்தி சரோஜா திருமணத்தை கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திக்கொள்ளவும் கருணாநிதி அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் சரபேஸ்வரர் பேத்தி சரோஜா அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் தனக்கு திருமணமான கோபாலபுரம் வீட்டை காண விரும்பினார். இதை அறிந்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, வீட்டுக்கு வந்த சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்முகத்துடன் வரவேற்று, முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டை சுற்றி காட்டினார்.
பல ஆண்டுகள் கழித்து தங்களது வீட்டுக்கு வந்து சுற்றிப்பார்த்த சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தனர்.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘வீடு என்பது பலரது கனவு. கனவு இல்லத்தை சம்பாதிக்கும்போது நாம் அடைகின்ற மகிழ்ச்சி அளவிட முடியாதது.
நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நமது அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு. கருணாநிதி திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு’ என குறிப்பிட்டுள்ளார்.