காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடத்துவது என, காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 24ம் தேதி தொடங்குகிறது.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21ம் தேதியிலிருந்து செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிப்பது என, கடந்த ஆண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்த இருப்பதால், இத்தேர்தல் தள்ளிப் போகும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தலைவர் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக, கட்சியின் உயர்மட்ட காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள கட்சியின் இடைத் தலைவரான சோனியா காந்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். அப்போது அவருடன் ராகுல், பிரியங்காவும் உடனிருந்தனர். இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்., சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், புதிய தலைவர் தேர்தலை வரும் அக்டோபர் 17ம் தேதி நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். தேர்தல் அறிவிப்பு முறைப்படி அடுத்த மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கும். செப்டம்பர் 30 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஒருவருக்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தால் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ம் தேதி எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் தெரிவித்தார்.

*22 ஆண்டுகளுக்கு பின்…
கடைசியாக காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 2000ம் ஆண்டில் நடந்தது. அப்போது, சோனியாவிடம் ஜிதேந்திர பிரசாத் தோல்வி அடைந்தார். அதன்பின், 2017-2019 வரை ராகுல் காந்தி தலைவராக இருந்த காலகட்டத்தை தவிர, தொடர்ந்து சோனியாவே தலைவராக நீடிக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அவர் பதவி விலக முன்வந்த போதிலும், தலைவராக தொடர காரிய கமிட்டி வலியுறுத்தியது.

*ராகுல்தான் ஒரே தேர்வு
கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘தலைவர் பதவிக்கு ராகுல் மட்டுமே எங்களின் ஒரே தேர்வு. அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க அவரை சம்மதிக்க வைக்க முயற்சிப்போம்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.