தருமபுரி: கர்நாடகா பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்புள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.