கிழவன்கோவில் – பிளவக்கல் இடையே மலைச்சாலை திட்டம் விரைந்து நிறைவேற்றப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு:கிழவன்கோயில் – பிளவக்கல் இடையே மலைச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்த சாலைக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாட்டிலிருந்து தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் கிழவன்கோவில் பிளவக்கல் மலைச்சாலை திட்டம் கடந்த 27 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ஒவ்வொரு நாளும் 4 கிமீ தூரம் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த 4 கிமீ சாலையை அமைக்க வனத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். இதனால் காமராஜர்புரம் பகுதியிலிருந்து வருசநாடு, மயிலாடும்பாறை, தேனி, உசிலம்பட்டி வழியாக 150 கிமீ சுற்றிக்கொண்டு திருவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பலமுறை மலைசாலையை அமைத்திட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து விவசாய விளை பொருட்களான இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி, தக்காளி, கத்தரி, பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறிகளை தேனி வழியாக விருதுநகர், மதுரைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு போக்குவரத்துச் செலவு மற்றும் நேரம் வீணாகி வருகிறது.

 இது சம்பந்தமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை சாலையை ஆய்வு செய்தனர். ஆனால் அதன்பிறகு பணிகள் ஏதும் நடைபொமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதற்கு வனத்துறை சாலை அமைக்க ஒப்புதல் வழங்காததே காரணம் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தற்போதைய தமிழக அரசு தங்கள் கோரிக்கையை ஏற்று மலைச்சாலையை அமைத்து தர நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.

இது சம்பந்தமாக வருசநாடு வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இதற்கு முன்பு கிழவன்கோவில் – பிளவக்கல் மலைச்சாலை சம்பந்தமாக என்ன நடைபெற்றது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளோம். எனவே இது சம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கருத்துகேட்டு பின் தெரிவிக்கிறோம்’ என்றனர். தொத்தன்குடிசை கிராமவாசி சின்னத்தாய் (75) கூறுகையில், ‘‘ எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த மலைச்சாலை சம்பந்தமாக அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சொல்லிக்கொண்டே செல்கிறார்கள் ஆனால் மலைச்சாலையை அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை.

இதனால் நாங்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் 150 கிமீ சுற்றிச் செல்லும் அவல நிலை தான் தொடர்கிறது’’ என்றார், அதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கூறுகையில், ‘ தமிழக அரசு முயற்சி எடுத்து இந்த மலைச்சாலையை அமைத்துவிட்டால் எங்கள் பகுதி செழிப்பானதாக மாறிவிடும். மேலும் பேருந்துகளில் சுற்றி செல்லும் அவல நிலை முடிவுக்கு வரும். தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையே பொருட்கள் போக்குவரத்து அதிகரிக்கும். வருசநாடு ஒரு வர்த்தக பகுதியாக மாறும். எனவே மலைச்சாலையை விரைவாக அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யர்சாமி கூறுகையில், இந்த மலைச்சாலை அமைந்துவிட்டால் இப்பகுதியில் 5 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனால் இரண்டு மாவட்டங்கள் இணைப்பில் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும். விவசாய நிலங்களில் உற்பத்தியாகும் தானிய வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக அமையும். இப்பிரச்னை குறித்து தேனி, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

முதல்வர் கவனத்திற்கு…
ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கூறுகையில், ‘‘தேர்தல் நேரத்தில் கிழவன்கோவில்  மலைச்சாலை சம்பந்தமாக பொதுமக்கள் கூறியுள்ளார்கள். நடைபெற இருக்கும்  சட்டமன்ற கூட்டத்தொடரில் இப்பிரச்னையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு  சென்று சாலை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

திமுக அரசு மேற்கொள்ளும்
இப்பிரச்னை குறித்து ஆண்டிபட்டி முன்னாள் எம்எல்ஏவும் தேனி வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘‘முதலமைச்சராக ஜெயலலிதா  இருந்தபோது தேனி மாவட்ட எல்லைவரை நிதிஒதுக்கீடு செய்து தார்சாலை  அமைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட பகுதியைச் சார்ந்த இடங்களில் வனத்துறை  அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதால் பணிகள் நடைபெறவில்லை. நான் எம்பியாக  இருந்தபோது இப்பிரச்னை தொடர்பாக மத்திய அரசிடம் பேசி சாலை போடுவதற்கு  பலமுறை முயற்சி செய்தேன். ஆனாலும் கிழவன்கோவில் – பிளவக்கல் மலைச்சாலை  திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது இனி சாலை போடுவதற்கான அனைத்து  நடவடிக்கைகளையும் திமுக அரசு தீவிரமாக மேற்கொள்ளும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.