தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் விற்பனை நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல விசைப்படகுகளுக்கு இந்த வகை கலப்பட டீசலை உபயோகபடுத்துகின்றனர். இது சந்தையில் விற்பனை செய்யபடும் டீசலைவிட விலை குறைவாக கிடைப்பதால், அவர்கள் அதிக அளவில் உபயோகபடுத்தி வருகின்றனர். சமீபகாலங்களாக தூத்துக்குடியில் இந்த பயோ டீசல் அதிக அளவில் விற்கபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் 3 தனிப்படைகள் அமைத்து, பயோ டீசல் விற்பனை செய்பவர்களை கண்காணித்து வந்தார்.
இந்த நிலையில், சிப்காட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் பயோ டீசல் பதுக்கி வைக்கபட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அருண் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனை சோதனையிட்டதில் தகர டின்களில் கலப்படம் செய்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி, டீசலை அங்கிருந்து எடுத்து செல்ல பயன்படுத்திய சிறிய லோடு வேன், அதனுடன் டீசல் பேரல்கள் மற்றும் சின்டெக்ஸ் டேங்குளும் இருப்பதை கண்டறிந்தனர்.
அப்போது ஏ.எஸ்.பி சந்தீஷ், டேனி என்பவரிடம் விசாரணை செய்து கொண்டிருந்தார். டேனி டீசலுக்கான பில்லை காட்டுவதாக கூறியபடி அங்கிருந்து நழுவி காட்டுப்பகுதிக்குள் தப்பியோட முயன்றார். இந்த டேனி தூத்துக்குடி மாநகராட்சியின் 24 வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் மெட்டில்டாவின் கணவர் என்பது குறிப்பிடதக்கது. இதனையடுத்து அங்கிருந்த ராஜகோபால், புஷ்பராஜ், ராமசாமி, பிரவீன், பவுல் அந்தோணி, டேனி ஆகியோரைக் கைதுசெய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திஸிடம் பேசினோம். “தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பயோ மற்றும் கலப்பட டீசல் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மீன்பிடித் துறைமுகங்களில் படகளுக்கு இந்த டீசல், விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது எங்கிருந்து வருகிறது என்று தொடர்ந்து கண்காணிதோம்.
இதில், தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் வைத்து கலப்பட டீசல் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரிலிருந்து 20,000 லிட்டர் டீசல் எந்தவித ஆவணங்களமின்றி கொண்டு வரப்பட்டு, இந்த குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்த டீசலில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட சில சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் சில பொருள்கள் சேர்க்கப்பட்டு கலப்படம் செய்யப்பட்டிருந்தது. இந்த குடோனுக்குள் பெரிய தொழிற்சாலை போன்று டீசல் கலப்படம் செய்யப்பட்டு தகர டின்களில் நிரப்பப்படுகிறது. அரசு, மீன்பிடி விசைப்படகுகளுக்கு மானியத்துடன் டீசல் வழங்குகிறது. ஆனால், அதிகமான லிட்டர் கணக்கில் டீசல் தேவைப்படும் சூழ்நிலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் டீசலைவிட விலை குறைவாக உள்ளதால் மீனவர்கள் இதனை வாங்குகின்றனர்.
இந்த கலப்பட டீசலை உபயோகப்படுத்தும் போது படகுகளில் உள்ள இஞ்ஜினில் அடிக்கடி பழுது ஏற்படும் . ஒரு கட்டத்தில் இஞ்ஜின் செயலிழந்துவிடும். இந்த கலப்பட டீசல் தயாரிப்பில் ஈடுபட்ட ஏழு பேரை கைதுசெய்துள்ளோம். இவர்களிடமிருந்து 35,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்பட டீசல் தயாரிப்பது, விநியோகம் செய்வது மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரை வரி இழப்பீடு ஏற்படுகிறது ” என்றார்.