போபால்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் பஜனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பிரபல டிபி மால் செயல்பட்டு வருகிறது. இந்த மாலில் உள்ள கடைகளில் பணியாற்றும் இஸ்லாமிய ஊழியர்கள் சிலர் தரை தளத்தில் உள்ள அவசர காலத்தில் வெளியேறி செல்லும் பகுதியில் தொழுகையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்த தகவலறிந்து பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் வணிக வளாகத்திற்கு புகுந்தனர். அப்போது இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொழுகையில் ஈடுபட்ட நபர்களை வீடியோ எடுத்தனர். இதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹனுமான் பஜனை பாடல்களை பாடி பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
பஜ்தங் தள் அமைப்பு
இதனால் டிபி மாலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வணிக வளாகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த பகுதிக்கு வந்து அனைவரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர், வணிக வளாகத்திற்கு சென்று சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பஜ்ரங் தள் எச்சரிக்கை
இதுகுறித்து பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் கூறுகையில், கும்பலாக தொழுகையில் ஈடுபடுவது நீண்டகாலம் டிபி மாலில் நடந்து வருகிறது. இதைப்பற்றி மாலில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் எங்களுக்கு தகவல் கூறினர். அதனடிப்படையில் தான் இன்று போராட்டம் நடத்தினோம். இனி டிபி மாலில் இஸ்லாமியர்களை தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டால், அதன்பின்னர் வணிக வளாகத்தின் முன்பு கூட்டாக சேர்ந்து அனுமன் பஜனை பாடல்கள் பாடுவோம் தெரிவித்தார்.
மால் நிர்வாகம் உத்தரவு
பஜ்ரங் தள் அமைப்பின் எதிர்ப்பின் எதிரொலியாக இனி மால் நிர்வாகம், இனி வணிக வளாகத்திற்குள் எந்தவொரு மதம் சார்ந்த செயல்களிலும் ஊழியர்கள் ஈடுபடக் கூடாது. இனி இஸ்லாமியர்கள் அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
உ.பி. சர்ச்சை
அண்மையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் புதிதாக தொடங்கப்பட்ட லுலு மாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியது சர்ச்சையானது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மாலில் மதம்சார்ந்த பிரார்த்தனைகளுக்கு அனுமதியில்லை என அந்த மால் நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.