சென்னை: சாலையோரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:
மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரின் கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன்படி வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு போன்ற திட்டங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடவும் இத்திட்டத்தை தற்போதைய நிதியாண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.
அதனை ஏற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகளை நடத்தஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை உள்ளபோது மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை, விற்பனைக்கு அனுமதி இல்லாத இடங்களில் இருந்து கடைகளுக்கு மாற்றுஇடம் ஒதுக்கீடு செய்யும்போது ஏற்கெனவே மாற்றுத் திறனாளிகள் தொழில் செய்து வந்த இடங்களுக்குஅருகிலேயே கடை ஒதுக்கி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு அருகில்விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை ஆகிய முன்னுரிமைகளின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க அரசு ஆணையிடுகிறது.
அதேபோல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது, மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில், தேவைப்படும் சான்றிதழ்களை வழங்கிட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து நகர விற்பனை குழுக்களுக்கு அறிவுறுத்திட உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.