புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் நிலவுகிறது. எதிர்காலத்தில் இந்த அச்சுறுத்தல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் டி-90 மற்றும் டி-72 ரக பீரங்கி வாகனங்களை இந்திய ராணுவம் கொண்டு சென்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் 40 முதல் 50 டன் எடை உள்ளன. சில பீரங்கி வாகனங்கள் கைலாஷ் மலைப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பீரங்கி வாகனங்கள் குறிப்பாக சமவெளிப் பகுதிகள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் போர் நடவடிக்கைகளுக்காக தயாரிக்கப் பட்டவை. உயரமான மலைப் பகுதிகளில் இந்த பீரங்கி வாகனங்களை குறிப்பிட்ட அள வுக்குத்தான் பயன்படுத்த முடியும்.
இதனால் இந்திய தயாரிப்பான இலகு ரக ஜோரோவர் பீரங்கி (ஏவிஎப்-ஐஎல்டி) வாகனங்களை சீன மலைப் பகுதிகளில் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த ரக பீரங்கி வாகனம் 25 டன்களுக்கு குறைவானவை. இதன் தாக்கும் திறனும் அதிகம். அதனால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 350 ஜோரோவர் பீரங்கிகளை சீன எல்லையில் பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. இவற்றை விமானப்படை ஜம்போ விமானங்கள் மூலம் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். மலைப்பகுதி பயன்பாட்டுக்கும் இந்த இலகு ரக பீரங்கி வாகனங்கள் எளிதாக இருக்கும்.
அதே போல் உயரமான மலைப் பகுதி, மற்றும் ஆழமான பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் எதிரிகளின் இலக்குகளை தாக்கும் பணியில் ஸ்வாம் ரக ட்ரோன்களை பயன்படுத்தவும் இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இரண்டு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்து இந்த ஸ்வாம் ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. மேலும், சீன எல்லையில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த அமெரிக்காவிடமிருந்து 300 கோடி டாலர் மதிப்பில் ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன்களை வாங்கும் பேச்சு வார்த்தையும் நிறைடையும் நிலையில் உள்ளது.