அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட மணல்சாலை ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக துண்டிக்கப்பட்டது. இதனால் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆற்றை கடக்க 10கி.மீட்டர் சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. செந்துறை அருகே வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கடலூர் மாவட்டம் சவுந்திரசோழபுரம் கிராமத்தை இணைக்கும் வகையில், பொதுமக்கள் சென்று வரும் வகையில் தற்காலிக மண் பாதை உள்ளது. ஆண்டு தோறும் தொடர்மழை காலத்தில் இந்த மண் பாதை தண்ணீரில் அடித்துச் செல்லும் நிலையில், இரு மாவட்டதையும் சேர்ந்த மக்கள் சுமார் 10 கி.மீட்டர் சுற்றி செல்வர். ஆற்றில் தண்ணீர் செல்வது குறைந்த பின்பு அருகே உள்ள ஊராட்சி சார்பில் மீண்டும் மண்பாதை அமைக்கப்படும்.
இந்த பாதையில் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிகழாண்டு அமைக்கப்பட்ட மண்பாதை நேற்றுமுன்தினம் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், தற்போது இரு மாவட்டத்தின் அப்பகுதியை சேர்ந்த சுமார் 10 கிராம மக்கள், சுமார் 10 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். இதனிடையே இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே சுமார் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினை உடனடியாக திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.