செப்டம்பர் 7ஆம் தேதி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது. இந்தக் கூட்டத்தில்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி,காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கே.எஸ். அழகிரி மற்றும் ராஜு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அழகிரி, “சமூக நீதிக்கு இன்று பங்கம் ஏற்பட்டுள்ளது, அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாக்க ராகுல் காந்தி மக்களிடம் சென்று அதை எடுத்து சொல்ல இருக்கிறார். இந்த நடைபயணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார். நான் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்போம். இந்த நடைபயணத்தின் போது, பாஜகவின் தவறான பொருளாதார, விவசாய கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்வோம்.
காங்கிரஸ் நூறு ஆண்டுகளை கடந்த பெரிய விருட்சம். பொருளில்லாமல் எதை வேண்டுமானாலும் பேசினால் புகழ் கிடைக்கும், பாஜக தலைவர் அண்ணாமலை, பெரிய குற்றச்சாட்டை சொல்கிறார், அதன் பிறகு அதன் மேல் யாராவது பதில் சொன்னால் அதை அவர் கண்டு கொள்வதில்லை. ஆளும் அரசுக்கு எதிராக பேசுவதால், பாஜகவிற்கு தமிழகத்தில் பிரபலத்துவம் ஏற்படுகிறது.
சென்னையில் இன்னொரு விமான நிலையம் வேண்டும், அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும். ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் சென்னைதான் வலிமையாக இருந்தது, ஆனால், தற்போது பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்கள் வளர்ந்துவிட்டன. தொழிற்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால் எப்படி வளர்ச்சி வரும்” என்று கேள்வி எழுப்பினார்.