சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை பல இடங்களில் கனமழை பெய்தது. மேட்டூர், ஏற்காடு, காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மேட்டூர் சுற்று வட்டாரப் பகுதி சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காட்டில், மலைப்பாதைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மிமீ):
சங்ககிரி 38.2, தம்மம்பட்டி 32, கரியகோவில் 15, ஓமலூர் 13, கெங்கவல்லி 12, வீரகனூர் 8, எடப்பாடி 7.6, ஆனைமடுவு 6, ஆத்தூர் 5, பெத்தநாயக்கன்பாளையம் 4.5, சேலம் 1.7 மிமீ மழை பதிவானது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கன மழையால் திருச்செங்கோடு அரசு கால்நடை மருந்தக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மழைநீர் மற்றும் கழிவு நீர் மருந்தக வளாகத்தில் புகுந்ததால் நேற்று மருந்தகம் இயங்கவில்லை.
திருச்செங்கோடு பழைய பேருந்து நிலைய வளாகம் எதிரே உள்ள சின்ன தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. எலச்சிபாளையம் ஒன்றியம், தோப்புவளவு பகுதியில் 35 வீடுகளில் மழைநீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மிமீ):
குமாரபாளையம் 25.40, மங்களபுரம் 66, மோகனூர் 10, நாமக்கல் 2, பரமத்தி வேலூர் 80, புதுச்சத்திரம் 5.20, ராசிபுரம் 2.20, சேந்தமங்கலம் 6, திருச்செங்கோடு 44, கொல்லிமலை செம்மேடு 12 என, மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு 10 மணி வரை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
வீரப்பன்சத்திரம் பகுதியில் சத்தி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்டுள்ள குழிகளில் குளம் போல தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். பல்வேறு பகுதி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மிமீ):
ஈரோடு 108, பெருந்துறை 13, கோபி 10, தாளவாடி 11.20, சத்தி 6, பவானிசாகர் 34.20, பவானி 64, கொடுமுடி 8.20, நம்பியூர், சென்னிமலை தலா 7, மொடக்குறிச்சி 31, கவுந்தப்பாடி 26.4, எலந்தைகுட்டை மேடு 17.8, அம்மாபேட்டை 11, கொடிவேரி 7, குண்டேரிப்பள்ளம் 14, வரட்டுப்பள்ளம் 20.4 மிமீ மழை பதிவாகியது.
பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 5,400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 1,800 கன அடியும், காலிங்கராயனில் 300 கனஅடியும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் 800 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.