ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், முதல் மூன்று மாதத்தில் ஆணையத்தால் அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை.
இவ்வாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தொடர்ந்து 14 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த ஆணையம் 158 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதில் 7 பேர் தங்களையும் விசாரிக்க வேண்டும் என்று மனு அளித்தவர்கள் ஆவார்கள்.
இந்த விசாரணையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறை உயரதிகாரிகள், போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என பலர் உள்ளனர்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எயம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. பின்னர் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் தனது வாக்கு மூலங்களை கொடுத்தார்.
பல மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி 7 பேர் கொண்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 10:40 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டுள்ள சுமார் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்பித்தார்.
முன்னதாக இந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டிருந்தது. ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“